அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பொன்-மணி  
Monday, 26 February 2007
02.  
பாலமனோகரன் அவர்கள் எழுதிய இரண்டாவது நாவல் 'குமாரபுரம்'  என்று நினைக்கிறேன். இதுவும் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. இன்று அப்பால் தமிழில் தொடராக வெளிவருவதைப்  பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நாவலும்  வாசகர்களின் பாராட்டைப்பெற்றது. அந்த நாளில் பலதடவைகள்  வாசித்துச் சுவைத்திருந்தேன். இதன்பிறகே வட்டம்பூ நாவலை அவர் எழுதினார். ஒரு முறை அவரை நான் சந்தித்த வேளையில் அடுத்த  நாவலுக்கு வட்டம்பூ என்று பெயர் வைக்கப்போவதாக என்னிடம்  கூறியிருந்தார். இந்தக்கால கட்டங்களில் இலக்கியம் பற்றிய  தொடர்புகள்  எங்களிடம் இருந்தன. இந்த தொடர்புகளுக்குப்  பாலமாக இருந்தவர் கவிஞர் 'முல்லையூரான்' என்றும்  சொல்லலாம் அவர் எழுதிய நர்மதா வெளியீடான 'போர்க்காற்று'  கவிதை நூலும் இக்காலகட்டத்தில் வெளிவந்தது. நாம் சந்திக்கும்  வேளைகளில் புதிய இலக்கியம் பற்றி எப்போதும் பேசுவோம்.  முல்லையூரானுக்கும் எழுத்தாளர் பாலமனோகரன் மீதும், அவர்தம்  எழுத்தின் மீதும் நல்ல அபிப்பிராயம். அவரும் ஒரு நல்ல  எழுத்தாளர். தமிழ் இலக்கியத்திற்கு தம்மாலான பங்களிப்பை  வழங்கியவர். எமது ஊரைச் சேர்ந்தவர். இடம்பெயர்ந்து  டென்மார்க்கில் வாழ்ந்து சென்ற ஆண்டு இவ்வுலகை விட்டு  மறைந்து விட்டார். இவருக்கான அஞ்சலியை அப்பால் தமிழ்  கண்ணீர் நினைவுகளோடு சமர்ப்பித்திருந்தது. நானும்  என் நினைவுகளைக் கவலையோடு மீட்டிப்பார்த்தேன்.  மறக்கமுடியாத துன்பச்சுமையது. நினைக்கும் தோறும் எப்போதும்  வலிக்கும். எங்கள் இலக்கியக்குழுவில் முல்லை சிறி குமுளமுனை தெய்வேந்திரம்பிள்ளை போன்றோரும் அடங்குவர்.
வட்டம்பூ நாவல் வெளிவந்தபோது நான் நாட்டை விட்டு  வெளியேறிவிட்டேன். அந்நாவலை வாசிக்கமாட்டேனா? என்கின்ற  ஏக்கம் பல காலங்களாக இருந்தது. மீண்டும் அப்பால் தமிழுக்கு  ஓரு நன்றி சொல்லத்தான்வேண்டும். என் ஆவலைப் பூர்த்தி செய்ய  தொடராக வெளியிட்டு வைத்தது. விரும்பிய வேளைகளில்  எப்போதும் எடுத்து வாசிக்கின்றேன். முல்லையிலிருந்து தண்ணீரூற்றுக்குச் செல்லும் பாதையில் ஐந்தாவது மைல் கல்லில்,  இடது பக்கமாகச் செல்லும் மண்பாதை ஒன்றுண்டு. கொஞ்சத்தூரம் நடந்து சென்றால் வரும். சின்னதாய் ஒரு சோலை. இதன் மத்தியில் ஆற்றுப்பள்ளம்; அதன்ஓரங்களில் அழகாகப்பூத்திருக்கும் சிகப்பு  மலரே வட்டம்பூ. இதன் அருகில் தான் கல்லடியான் கோவில்  இருக்கிறது. எந்தக் கட்டிடங்களும் இல்லாமல் வயலுக்குள் ஒரு  கல்லு மாத்திரம் இருக்கிறது. இக்கோவிலுக்குப் போகின்றவர்கள்  பூசைக்காக இந்தப்பூவைத்தான் பறித்துப் பூசிப்பார்கள். நானும்  சின்னவயதிலே அம்மாக்களுடன் போனபோது இதுதான் வட்டம்பூ  என்று முதன்முதலில் அம்மா எனக்குக்காட்டினா. ஆறுபாய்ந்த  வண்டல் மண் ஒதுங்கும் பகுதியில் துவரை மரங்களுக்கு  அருகில், அழகாகப் பூத்திருக்கும் காட்டுமலரே இந்த வட்டம்பூ.
அளம்பில் பிரதான சந்தியிலிருந்து குமுளமுனைக்குச்  செல்லும்பாதை அந்தக்காலத்தில் செம்மண்ணாலானது. வலது  பக்கம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இடது பக்கம்  சுவாமிதோட்டம். செழிப்புற்று வளர்ந்து நிறையக் காய்த்திருக்கும்  தென்னை மரங்கள் இரண்டு பக்கமுமே, பல வர்ணங்களில்  குலைகுலையாகத் தொங்கும். இளநீர்க் குலைகளைப்  பார்க்கின்றவேளையில் வாயில் எச்சில் ஊறும். எனக்கு அப்போது  சின்ன வயது நாங்கள் வண்டிலில்தான் வயலுக்கப்போவோம்.  மரங்களைப் பார்த்தால் நிலத்தில் நின்றபடியே இளநீர் பிடுங்கலாம்.  சந்தியில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் வரை  தோட்டங்கள் தொடரும். அதன்பின் சின்னதாய் விடத்தல்காடு,  அதற்கப்பால் இருண்டகாடு இரண்டு பக்கமும் உயர்ந்து வளர்ந்த  மரங்கள், முதிரை, பாலை, காட்டாமணக்கு, விண்ணாங்கு, வீரை,  துவரை என்று அடுக்கிக்கொண்டு போகலாம். எப்போதும்  அமைதிநிலவும். பாதையின் அருகில் எந்தவித பயமும் இல்லாமல் கிளறி மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுக்கோழிகளின் கூட்டம்  பலவர்ணங்களில், பார்ப்பதற்கே அழகாக இருக்கும். ஜில்  வண்டுகளின் ரீங்கார இசையும், மின்மினிப்பூச்சிகளின்  பளிச்பளிச்சென்ற வெளிச்சமும் இரவை நினைவு படுத்தும்.  அப்போதெல்லாம் இந்தப்பாதையால் பிரயாணம் செய்வது  பயங்கரமானது. கொடிய காட்டு மிருகங்களின் இராச்சியம்  இந்தக் காட்டிலும்தான். பாதையின் அருகில் நிற்கும் வெள்வரட்டை  மரங்களின் பட்டை யானைக்குப் பிடித்த உணவாம். எங்கடை அப்பு  சொல்லுவார் பல தடவைகள் இந்தக்காட்சிகளை நான்  பார்த்திருக்கிறேன். யானைகள் மரங்களை முறிக்கும் சத்தம்  கேட்கும் மயில்  அகவும் சத்தமும் குயில் கூவும் சத்தமும்,  குக்குறுப்பான் கத்தும்சத்தமும் அடிக்கடி கேட்கும்.  மரக்கொப்புகளில் தாவி ஓடும் மர அணில்கள் கொடிய  விலங்குகளின் அரவம் கேட்டு குதித்தோடும் குரங்குகளின்  ஆரவாரம். இந்த உலுப்பலில் உதிரும் காட்டுப்பழங்கள்,  பொலபொலவென்று வண்டிலில் சொரியும். இப்போது  நினைக்கும்தோறும் நெஞ்சை நெருடிச் செல்லுகின்றது. காட்டாற்று  வெள்ளம் மேவிப்பாய்வதால் சீரற்ற பாதை குன்றும் குழியுமாகப்,  பிரயாணம் செய்வதற்கே கடினமாக இருக்கும். வண்டிலில்  போகும்போது பயத்தில் ஒருவரோடு ஒருவர்  கதைப்பதில்லை. நாங்களும் அமைதியாகிவிடுவோம். மிருகங்களின் ஒலிகள்  அப்பப்போ  கேட்டுக்கொண்டே இருக்கும். அரைவாசித்தூரம் வர வலது பக்கமாக பாதையோரத்தில் கிரவல் அள்ளிய கிடங்குகள், மழைகாலத்தில்  இந்தக்கிடங்குகளில் நீர் நிறைந்து நீலமாகத்தெரியும். கிடங்கின்  மேல்காட்டோரத்தில் துவரை மரங்கள் செழிப்போடு வளர்ந்து  நிற்கும். இந்த மரங்களோடு மரங்களாக வட்டம்பூ மரங்கள்  செக்கச்செவேலென குப்பென்று பூத்திருக்கும். சிவப்பென்றால்  அப்படி ஒரு சிகப்பு இந்த நிறத்தை இயற்கையால்தான் தரமுடியும்.  பாலமனோகரனின் வட்டம்பூ நாவலின் நாயகன் சிங்கராயரும்,  இயற்கை,  விரும்பித்தோற்றுவித்த அற்புதப்பாத்திரம். இவ்வாறான  பாத்திரங்களை காடும், காடுசார்ந்த கழனிகள் நிறைந்த  கிராமங்களிலும் பார்க்கலாம். அனுபவ வடுக்களைச் சுமந்து,  துணிவையே துணையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் இவர்கள்.  எங்கள் ஊரிலும் இவ்வாறான பாத்திரங்கள் தோன்றி வரலாறு  இல்லாமலே போய்ச் சேர்ந்து விட்டன. இந்நாவலை  வாசிக்கும்தோறும் இந்த நினைவுகள் வந்துபோகும்.  பாலமனோகரனின்  கதைகளில்தான் இவ்வாறான கதா  பாத்திங்களை நாம் இனிப்பார்க்கலாம். குமுளமுனை தொடங்கப்  பலாப்பழ வாசனை காற்றோடு கலந்து வந்து மூக்கைத்துழைக்கும்.  குமுளமுனை செம்மண் சேர்ந்த  அற்புதக்கலவை வளம்நிறைந்த  பூமி பனை, தென்னை மா, தோடையென்று நிறையவே  செழிப்பானவை. வீட்டுத்தோட்டம் முதல் காட்டு மரங்கள் வரை  பச்சைப் பசேலெனக்காட்சி தரும்.                             
பின்னாளில் அளம்பில், குமுளமுனை பாதையோரக் காடுகள்   அழிக்கப்பட்டு கச்சான் பிலவுகளும், வாழைத்தோட்டங்களும்,  செந்நெல் வயல்களும் உருவாகின. இந்தப்பாதையால்  செல்லும்போது இடதுபக்கமாக தெரியும் சிறுகடல்.  இந்தச் சிறுகடலின் மேலாகத் தெரியும் மிக நீண்ட காட்டுத்தொடர்,  இதன் மத்தியில் உயர்ந்து  நிற்கும்  பனைமரங்கள், தென்னைகள்,  இடுக்கில் ஒன்றிரண்டு வீடுகளையும் காணலாம். அங்கே தெரியும்   கிராமம்தான் ஆண்டாங்குளம் என்று  வண்டிலில் போகும்போது   அம்மா எனக்குப்பலமுறை காட்டியிருக்கின்றா. வளமான கிராமம்  தம்பி பால், தயிர், நெய் இறைச்சி நெல்லென்று ஒன்றுக்கும்  குறையிருக்காது, கொஞ்சக் குடிகள்தான் அங்கு இருக்கிறார்கள் நீர்  நிறைந்த காலங்களில் வள்ளத்தில்தான் போகவேண்டும்.  ஒவ்வொருமுறையும் வயலுக்குப் போகும்போது அம்மா  எனக்குச்சொல்லுவா. அப்போதெல்லாம் இக்கிராமத்தைப் போய்ப்  பார்க்கவேண்டுமென்று மனம் கிடந்து  துடிக்கும். ஆனால் அந்தச்  சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை. இது எனக்கு ஒரு தீராத  கவலை. அந்த ஆண்டாங்குளப் பிரதேசத்தை கதையின்  பகைப்புலமாக்கி அதன் வளத்தையும், தரத்தையும், அற்புதமாகப்  படைத்திருக்கிறார் கதாசிரியர். மரம் மட்டை, குட்டை, குளம் என்று  ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. நான் நேரில் பார்த்திருந்தால்  கூட இப்படி ரசித்திருப்னோ என்பது கேள்விக்குறிதான். அந்த அளவில் அவரின்  எழுத்துத்திறமை அமைந்திருக்கின்றது.
குமுளமுனைக்குச் சென்றால் விசுவலிங்கம் கடையில் தேநீர்  அருந்தாமல் நகருவதில்லை. வேர்த்து வழியும் இருந்தாலும்,  சைக்கிளை வேலியோடு சாத்திவிட்டு
மண் குடத்தில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை வார்த்து  களைப்புத்தீர குடித்து விட்டு, அந்த வாங்கில் சற்று இருந்து  இரண்டு வாய்ப்பன், கொதிக்கக கொதிக்க தேநீரொன்று  அருந்தி  விட்டுத்தான் எங்கள் பிரயாணம் தொடரும். இவரது கடையில்  இருந்து நேராகச் செல்லும் பாதையால்தான் தண்ணிமுறிப்பு  வயல்களுக்குச் செல்லவேண்டும். சந்தியில் இடது பக்கம் அரசாங்க விடுதி ஒன்று உண்டு. இங்கேதான் கதையில் வரும் செல்வம்  ஓவிசியர் வாழுகின்றார். இவருக்குத்தான் சிங்கராசர, சேனாதியிடம் உடும்பு கொடுத்து விடுகின்றார்.  இந்தப்பாதை எப்போதும் சீரற்றதாகவே இருக்கும் மழை வெள்ளம்  பாய்ந்து எங்கும் கிடங்கும் மடங்குமாய்க் கிடக்கும். கொஞ்சத்தூரம்  செல்ல கொடடுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் வரும், இதனை  தரமறுந்த பிள்ளையார் கோவில் என்றும் அழைப்பதுண்டு. இங்கே  ஒவ்வொரு நாளும் பொங்கல் பூசை நடக்கும். இந்தப் பூசையில்  பூசாரியென்று யாரும் இருக்கமாட்டார்கள். ஊரவர்கள் தாங்களே  பொங்கித் தாங்களே படைப்பார்கள். மூலஸ்தானம் வரை திறந்தே  இருக்கும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தப்பிள்ளையாரின் தலை  அடித்து நொருக்கப்பட்டதாகவும், துதிக்கையின் பாதிப்பகுதி  பின்னால் நிற்கின்ற வெள் இத்திமரத்தில் பறந்து  ஒட்டிக்கொண்டதாகவும், அதன்வடிவம் துதிக்கைபோல்  வளைந்திருப்பதாகவும், கதையொன்றுண்டு
அதனால்தான் தரமறுந்த பிள்ளையார் என்ற பெயர்  வழங்கலாயிற்றாம். கோவிலுக்குச் சொந்தமான கேணியில்  எப்போதும் நீர் நிறைந்து நிற்கும். இதிலிருந்து வெளிவரும்  நீர்க்கசிவு அந்தப்பிரதேசத்தையே பசுமையாக்கி வைத்திருக்கின்றது.  மின்னி மரங்கள் செழிப்போடு வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும்.  மாலை, வயலால் திரும்பி வரும்போது இந்தக்கேணியில் குளித்து  எருமைப்பால் பொங்கலைச் சுவைத்த சுகம் இப்போதும் எனக்குண்டு.
இந்த இடத்தில் இருந்துதான் கதையில் வரும் மனோமாஸ்ரரும்,  காந்தியும் உட்கார்ந்து கதைக்கின்றார்கள். இதிலிருந்து  ஆண்டாங்குளம் அதிகதூரமில்லை. அந்திவானம் சிவக்கின்றபோது  செங்கதிர்கள் சிறுகடலில் பதிந்து காட்டோரம் மறைந்து கிடக்கும்  கிராமத்தின் முன் கோலம் போட்டது அழகாக இருக்கும்.
இயற்கை உணவும், மூலிகை சுமந்த மருத்துவக்காற்றும், உறுதி  மாறாத வைரம் பாய்ந்த தேகமும், வயதுக்கேற்ற அனுபவமும்  கொண்ட வட்டம்பூ நாயகனாக ஆசிரியர் சிங்கராயரை  அறிமுகப்படுத்துகின்றார். இந்தப்பாத்திரம்
அவர் தேர்ந்தெடுத்த கிராமத்திற்கு ஏற்றவகையில் அற்புதமாகப்  படைக்கப்பட்டிருக்கின்றது. கதையை ஆரம்பிக்கும்போது எத்தனை  துணிச்சல் ஆசிரியருக்கு, சிறுத்தையையும், கலட்டியனையும்  அறிமுகப்படுத்தி அடுத்த அத்தியாயத்தை  விரைவாகத் திருப்பிப்பார்க்க வைக்கின்றார். எழுத்துத்திறன் சிறப்பாக இருந்தால் பாத்திரங்கள் மனிதராகத்தான் இருக்கவேண்டுமென்பது  அவசியமில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்து கதையை சுவைபடவும்  விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்லும் ஆற்றல்  பாலமனோகரனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றது. அப்பால்  தமிழில் இணைந்திருக்கும் இந்நாவல்கள் மூன்றும் இதற்கொரு  எடுத்துக்காட்டு. அவர் வாழ்க்கைச் சூழலில் இதுசாத்தியமாகியது  எனக்கொள்ளலாம். வன்னியின் வளங்கள் நிறைந்த கிராமங்களில்  அவர் பாதங்கள் நிதானித்து நடந்திருக்கின்றன, அடித்தட்டு  மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து பாத்திரங்களைத் தெரிவு  செய்து, அவர்தம் பழக்க வழக்கங்களை நேர்த்தியாகச் சுவை  படச்  சொல்லியிருக்கின்றார். குழுமாட்டுத் தலைவனான கலட்டியன்  எப்போது சிங்கராயரால் அடக்கப்படும் என்கின்ற ஆர்வம் வாசிக்கும் தோறும் வாசகர்களுக்கு ஏற்படும். கிராமத்தின் இயற்கையை  ரசிப்பவர்களுக்கு வட்டம்பூ நாவல் நல்லதொரு படையல்.  வன்னியில் குழுமாட்டு வேட்டையென்பது பிரத்தியேகக் கலை.  ஆபத்தானதும்கூட. பட்டியிலிருந்து மாடுகள் காடுகளில்  மேச்சலுக்கு  செல்கின்றபோது தவறும் சிலகன்றுகள் காடுகளில்  தன்னிச்சையாக வளர்வதுண்டு. இவைகள் ஊர் மாடுகளைவிட அதீத பலம்கொண்டவை, காட்டு உணவுகளால் தேகம் பெருத்து, ஆசிரியர்  எழுதியிருப்பதைப் போல சின்ன யானைகளின் உருவத்தை  ஒத்தவையாக இருக்கும். ஏனைய காட்டு மிருகங்களால் தமக்கு  ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து அதற்கேற்ற வகையில்  தம்மைத்தயார் படுத்திக் கொள்ளும் ஆற்றலை  வளர்த்துக்கொள்பவை. இந்தமாடுகளை வேட்டையாடி இறைச்சியாக, வத்தலாக விற்பனை  செய்பவர்கள் வன்னிப்பகுதியில் நிறையப்பேர் இருந்தார்கள். மரை இறைச்சியென்று பொய்சொல்லி விற்பனை  செய்பவர்களும் உண்டு.
தொடரும்.
                       

மேலும் சில...
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 01:10
TamilNet
HASH(0x5655449e4948)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 01:10


புதினம்
Fri, 29 Mar 2024 01:10
















     இதுவரை:  24714610 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4753 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com