அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 6 arrow ஓர் அகதியின் தாயும் தாயகமும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓர் அகதியின் தாயும் தாயகமும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 01 June 2004

18-05-2003 ஞாயிற்றுக்கிழமை

இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து வதியும் மண்டலங்களில் ஓன்றான ஐரோப்பாவில் தொலைபேசிகள் அதிகாலையில் ஒலித்தாலே பதட்டத்துடனும் நடுக்கத்துடனும்தான் ஒலிவாங்கியை எடுக்க முடிகின்றது. அநேகமாக இ;ந்த அதிகாலை அழைப்புகள் இலங்கையில் இருந்து அல்லது இந்தியாவில் இருந்தே வருகின்றன. இவை ஏதாவது சங்கடம் தருகின்ற செய்திகளைத்தான் அநேகமாகச் சொல்கின்றன.  இப்படி அதிகாலையில் ஒலித்து எழுப்பிய தொலைபேசியில்தான் அம்மா இறந்து விட்டார் என்ற செய்தியும் எனக்கு வந்து சேர்ந்தது. எதிர்பார்த்ததா? எதிர்பாராததா? சொல்வது கடினம்தான். ஏனெனில் ஒருவாரத்திற்கு முன்னால் மாரடைப்புக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தேறியிருந்த அம்மாவுடன் முதல்நாளும் அதாவது சனிக்கிழமையும் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியிருந்தேன். தான் நாளை மறுநாள் வீட்டுக்கு சென்று விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். என்னைத் தான் எதிர்பார்த்திருப்பதாயும் கட்டாயம் வந்து செல்லும்படியும் கூறியிருந்தார். அம்மா வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்படுகின்றார் என்று அறிந்த அன்றே அங்கு செல்வதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருந்தேன். அதன்படி வைத்தியசாலையில் இருந்து அம்மா தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார் என்ற சான்றிதழை மருத்துவனை நிர்வாகத்திடம் நான் கேட்டிருந்தேன். அவர்கள் அம்மாவுக்கும் அந்தத் தகவலைத் தெரிவித்து விட்டனர். இதனால் நான் எப்படியும் வருவேன் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருந்தார். அந்த மகிழ்ச்சிதான் அவரை மரணத்திற்கும் வழிகாட்டியிருக்கலாம். என்னைக் காணவேண்டுமென்ற அவா அவரிடம் மேலோங்கி இருந்தது. நான் மூத்த மகனானதாலும் அதற்கும்மேலாக 'மந்தையில் இருந்து காணாமல் போன ஆடு" என்பதாலும் என்னிடத்தே மிகுந்த வாஞ்சை கொண்டிருந்தார். நான் அவரைப் பிரிந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன. உண்மையில் அவர் எதிர்பார்த்த வாழ்க்கைப் பாதையில் இருந்து பிரிந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியிருந்தன. 1972ம் ஆண்டுக்குப் பின்னால் எனது வாழ்க்கை சிறையும் தலைமறைவுமாகக் கழிந்தது. யாழ்ப்பாணம் கொழும்பு சிறைச்சாலைகளின் வாசல்களில் அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. இவை அவருக்கு மாளாத துன்பத்தைத் தந்தது என்பதை நான் அறிவேன்;.
இருந்தும் பின்னாட்களில் அவரை நான் மூன்று தருணங்களில் மகிழ்ச்சிப்படுத்தினேன் என்பது எனக்கு ஆறதலைத் தருகின்றது.  ஒன்று 1989ம் ஆண்டில் நான் திருமணத்திற்கு தயார் என அறிவித்தது. அதன் மூலம் பொறுப்பற்றவனாய் இருந்து விடுவானோ என்ற அவரின் அவநம்பிக்கையை போக்கியது. இரண்டாவது 1993ல் எனது முகம்கொள் கவிதைத் தொகுதிக்கு விருது கிடைத்ததும், அந்த விருதுப்பணம் முழுவதும் அம்மாவுக்கு சேரும்படி நான் செய்ததும். இதன் மூலம் தனது மூத்த மகனிடம் இருந்து பண உதவி பெறவில்லையே என்ற குறையை போக்கியது. மூன்றாவது தான் விரும்பிக் கேட்கும் சர்வதேச வானொலி ஒன்றில் தனது மகனின் குரலைக் கேட்டது. இரவில் தலைமாட்டில் வைத்தபடி வானொலிச் செய்திகளை கேட்பதை அம்மா பழக்கமாக கொண்டிருந்தவர். 2001ல் பி.பி.சி. தமிழோசை, என்னிடம் தொடர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும்படி கேட்டபோது பல தயக்கங்கள் இருந்தபோதும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு இருந்த பல காரணங்களில் எனது குரலை அம்மா கேட்பார் என்பதும் ஒன்றாக இருந்தது.  உண்மையில் அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்திருந்தது. இவையாயினும் என்னால் செய்;ய முடிந்திருக்கின்றதே. நான் இங்கு வந்து சேர்ந்ததன் பின்னால் எனது கடைசித் தங்கச்சியின் வேலைகாரணமாக திருக்கோணமாலைக்கு வந்து வாழந்தொடங்கியதன் பின்னால் கடிதம் எழுதுவது குறைந்து தொலைபேசி உரையாடல்கள் அதிகரித்திருந்தது. அந்தத் தொலைபேசி உரையாடல்களின்போது தனது இறுதிக்காலத்தை என்னுடன் கழிக்க வேண்டுமென அடிக்கடி கூறிவந்தார்.  மருத்துவ மனையில் இருந்து என்னுடனான அந்த கடைசித் தொலைபேசி உரையாடலிலும் ஒருமாதமாயினும் தன்னுடன் நிற்கும்படியும் திருகோணமலையில் இருந்து தன்னை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லும்படியும் கேட்டிருந்தார்.
இன்னொரு நாட்டில் அகதித் தஞ்சம் பெற்ற  ஒருவர் தனது சொந்த நாட்டில் அமைதி ஏற்படும்வரை அங்கு திரும்ப முடியாது. இந்த எச்சரிக்கை அகதிகளுக்கு வழங்கப்படும்  நீலநிறக் கடவுச்சீட்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் தவிர்க்க முடியாத தருணத்தில் ஒரு தடவை செல்வதற்கு பிரான்சில் வாய்ப்பளிக்கிறார்கள். அந்த வாய்ப்பையே அம்மாவைக் காண்பதற்குப் பயன்படுத்த முயற்சித்திருந்தேன். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களுடன் எனது விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தேன். எனது விண்ணப்பத்திற்கான முடிவினை ஒருவாரத்தின் பின் தெரிவிப்பதாக கூறியிருந்தார்கள். அவர்களின் பதிலில் நம்பிக்கை தொனிக்கவில்லை. எனக்கு ஏமாற்றமாகவும் கவலையாகவும் இருந்தது. இவ்வாவணங்கள் சமர்ப்பிப்பதற்கு திரு.திருமதி தொர தம்பதியினரும், திரு.à®….முருகையன் அவர்களும் துணை புரிந்திருந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வந்த செய்தி நிலமையை முற்றாக மாற்றிவிட்டது. நான் உடைந்து போனேன். பேச்சு வரமறுத்துவிட்டது. தொலைபேசிகளில் மாறி மாறி சகோதரர்கள் அறுவரும் எனக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கவலையை யார் ஆற்றினார்களோ? இடைக்கிடையே வந்த நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு சுமதிதான் பதிலளித்தார். அம்மாவை நான் ஏமாற்றினேனா? என்னை அம்மா ஏமாற்றினாரா? என்னுள் கேள்விகள் குமிழிட குமிழிட கண்ணீர் கொப்பளித்த வண்ணம் இருந்தது.

19-05-2003 திங்கள்

ஞாயிறு இரவு தூங்காமல் விழித்திருந்த நான் காலையில் எங்கள் மாவட்டத்தின் நிர்வாக செயலகத்தின் வாயிலில் முதலாளாய் நின்றேன். ஒன்பது மணிக்குக் கதவு திறந்ததும் ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்திருந்த குடிவரவுத் திணைக்கள அதிகாரியிடம் எனது கோப்பினைக் கவனித்து முடிவை விரைவாகத் தெரிவிப்பீர்களாவென கண்ணில் நீர்தளும்பக் கேட்டேன். அம்மா நேற்று இறந்துவிட்டார் என்ற ஆவணத்தையும் சமர்ப்பித்தேன். மனசின் அவசரம் போலும் எனது கைகளில் லேசான நடுக்கம் இருந்தது. அதிகாரியின் பேச்சில் கடுமை இருக்கவில்லை. பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும்படியும் புதன்கிழமை அனுமதி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஊருக்கு போகலாம் என்பது உறுதியாகிவிட்டது.

22-05-2003 வியாழன்

இலங்கை நேரப்படி காலை ஒன்பதரை மணிக்கு கொழும்பு விமானநிலையத்தை அடைந்தேன். என்னுடன் பிரான்சில் வதியும் தம்பியும் கூடவே வந்திருந்தான். அவனும் என்னைப்போல் அகதி நிலைதான் என்பதால் எனது வழிமுறையிலேயே பயணித்தான். புதன் காலையில்தான் எனக்கு பயண அனுமதி பத்திரத்தை தந்திருந்தார்கள். என்னுடைய அகதியட்டை, அகதிகளுக்கான கடவுட்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்கள் என்பவற்றை பிணையாக வாங்கி வைத்துக் கொண்டுதான் இந்தப் பத்திரத்தை என்னிடத்தே தந்தார்கள். அதில் பதினைந்து நாட்கள் மட்டுமே இலங்கையில் நான் தங்கியிருக்கலாம் என வரையறை செய்யப்பட்டிருந்தது. இது துயரத்துடன் ஏமாற்றத்தையும் எனக்கு அளித்தது. தம்பிக்கு ஒருமாதம் வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்திற்கு மாவட்டம் நடைமுறைகள் வித்தியாசப்படுகின்றன. இரவுப் பயணம் முழுவதும் விமானத்திற்குள் தூக்கமின்றியே கழிந்தது. அம்மாவே கண்ணுக்குள் நின்று கொண்டிருந்தார். அம்மா தாதியாகக் கடைமையாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.  அவரது வேலைச் சுமைக்குள் எனது வேண்டுகோளுக்கேற்ப மேலதிக சேவைகளையும் செய்தவர். எனது செயற்பாடுகள் காரணமாக அவரது வேலைக்கும் இடையூறுகள் ஏற்பட்டதுண்டு. நினைக்கையில் நெஞ்சுக்குள் குற்ற உணர்வே மேலோங்கியது. கொழும்பில் இறங்கியதும் அன்று மதியமே யாழ்ப்பாணம் செல்வதற்கான விமான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. கடவுச்சீட்டின்றி பிரெஞ்சு மொழியில் வழங்கப்பட்டிருந்த எங்களின் பயணப்பத்திரத்துடன் குடிவரவு அதிகாரிகள் அல்லாடினர். கேள்விமேல் கேள்விகள் கேட்டு உயரதிகாரிகள் வந்து பார்த்து ஒருவழியாக கடைசியாட்களாக நானும் தம்பியும் வெளியே வந்தோம். அம்மாவின் முகத்தை நேரே தரிசிக்கலாம் என்பது உறுதியாயிற்று. எனது இளநண்பர் nஐயமுருகன் பயண ஒழுங்குகளுடன் வெளியே காத்திருந்தார். நேராக உள்ளுர் விமான நிலையமான இரத்மலானவுக்கு செல்வது  ஏற்பாடாகி இருந்தது. நான் கொழும்பில் நிற்கிறேன் என்பதே நம்பமுடியாததாக இருந்தது. கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நகரூடாக இரத்மலான நோக்கி பயணித்தோம். கொழும்பு நகருக்குள் நுழைய நான் மயக்க நிலையை நோக்கி நகர்வது எனக்கு நன்றாகத் தெரிந்தது. நகரம் கலங்கலாகி புகாருக்குள் மறைந்து கொண்டிருந்தது. அம்மாவை தரிசிக்காமலேயே நான் கொழும்பில் தரித்துவிடுவேனோ என்னும் எண்ணமும் தலை நீட்டுகின்றது. "என்னை நண்பர் கவனித்துக் கொள்வார் நீ திட்டமிட்டபடி யாழ்ப்பாணம் செல்" தம்பியிடம் கூறுகின்றேன். எனது கட்டுப்பாட்டை நான் மெல்ல இழந்துகொண்டிருந்தேன். அருகில் இருந்த தம்பியின் மேல் சரிந்து கொள்கின்றேன். நான் இன்னமும் நினைவிழக்கவில்லை. மருத்துவமனையை தேடி வண்டி அலைகின்றது.
 
23-05-2003 வெள்ளிக்கிழமை

காலை பத்துமணியளவில் பலாலி ஓடுபாதையில் உள்ளுர் விமானம் தன் உருளும் கால்களை பதித்த வேளையில் மீண்டும் என்னுள் நடுக்கம் ஆரம்பித்தது. நண்பர் என்னருகில் இருந்தார். அவரிடம் நான் காட்டிக்கொள்ளவில்லை. கண்களை மூடிக்கொண்டேன். எனது ஊரில் எனது தாயகத்தில் என் தாயின் தரிசனம் எனக்கு கிட்டப்போகின்றது. என்னுள் நிகழ்ந்த குமுறலில் கொந்தளிப்பில் ஆழ்மனக் கதவங்கள் எல்லாம் படீரெனத் திறந்து கொள்கின்றன. மூளைப்பொறி உருகி கசிகின்றது. மண்ணாய் கல்லாய் மரம்செடி கொடியாய் பற்றைக்காடாய் பனங்கூடலாய் வெயிலை சுவைத்தபடி விரிந்துகிடக்கும் இவைதானே என்னை நாளும் பொழுதும் ஏங்க வைத்தவை. என்னை இயங்க வைத்தவை. சுற்றிலும் பார்க்கிறேன். என்தன் உயிர்தனை ஓம்பும் முலைப்பாலினை வழங்கிய தாயவளின் தரிசனம் கண்டு வியக்கின்றேன். மண்ணைத் தொட்டு கண்களில் ஒற்றுகிறேன்.
யாழ்ப்பாண நகரத்தை நோக்கி அந்த வான் புறப்பட்டு விட்டது. செம்மண் புழுதியை வாரியிறைத்தபடி அது குலுங்கி குலுங்கி விரைகின்றது. வெளியே பார்வையை ஒடவிட்டபடி இடங்களை அடையாளம்காண முயற்சிக்கின்றேன். முடியவில்லை. யாழ்ப்பாண நகரில் இருந்து 764ம் இலக்க பேருந்து செல்லும் இந்த வீதி, இடையிடையே வரும் சந்திகள், வீதி மருங்கே உள்ள ஊர்கள் அனைத்தும் நான் அலைந்து அளைந்து திரிந்த இடங்கள். ஊரெழு வரும்வரையில் எந்த அடையாளத்தையும் என்னால் காண முடியவில்லை. நான் படிக்கும் காலத்தில் இருந்து பழகிக் களித்த குப்பிளான் கிராமத்திற்கு வழிகாட்டும் வடக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியையும் காண முடியவில்லை. எல்லாம் சிதைவும் சீரழிவும்தான். உரும்பிராய் சந்தியை நோக்கி பேருந்து விரைகின்றது. சிவகுமாரன் சிலையை கண்தேடுகின்றது. பெருக்கெடுத்துப் பாயும் நதியொன்றின் மூலமல்லவா அவன்! அக்கினிக் குஞ்சொன்றை ஆங்கோர் காட்டிடை பொந்தினுள் வைத்தவன் அல்லவா அவன்! ஆனால் அவன் சிலை கண்ணில் தென்படவில்லை. 1972ல் இருந்து 1974 ஐ_ன் 5ம் நாள் மாலைவரை அவனுடன் கூடவே இருந்த காலக்கரைவுகள் மேலெழும்புகின்றன. சிவகுமாரனின் அன்னைதான் முன்னெழுந்து வருகின்றார். எந்தன் தலைதனை வருடி நலம் விசாரிக்கின்றார். எனக்கும் சிவகுமாரனுக்கும் சோறிடுகின்றார். எத்தனை அம்மாக்கள் இப்படி பரிவுடன் சோறிட்டனர். இந்த பிள்ளைகளின் நியாத்தை அவர்கள்தானே முதலில் உணர்ந்தார்கள். அந்த வீடிருந்த திசையில் வணக்கம் செலுத்துகிறேன்.
பண்ணைக்கு அருகே பயண ஊர்திகள் தரிப்பிடத்தில் வான் நிறுத்தப்பட்டுவிட்டது. இறங்கிக் கொள்கிறேன். அது புதியதாய் முளைத்த இடம். யாழ்பாணக் கோட்டை இருந்த இடத்தில் புதர்மண்டிக் கிடக்கின்றது. வாடகைவண்டியில் ஏறி வீட்டின் முகவரியைச் சொல்கிறேன். வண்டி வீரசிங்கம் மண்டபத்தை தாண்டி யாழ்பாண நூலகத்தின் பின்பகுதியால் சரிந்து விழுந்து உருள்கின்றது. யாழ்பாணச் சிறைச்சாலையை வயிறாக கொண்டிருந்த ஒல்லாந்தர் கட்டிய கோட்டை, அதன் நுழைவாயில் காவலரண்போல் விளங்கிய யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் என்பன சுவடழிந்து வெளியாகிக் கிடந்தன. அந்த வெளியின் மேலால் பண்ணைக் கடலில் இருந்து கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது.
இந்த வீரசிங்கம் மண்டபத்தின் முன்றலில்தான் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் துயரங்கள் நடந்தேறின. அந்த துயரத்தின் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுத் து}ண்கள் சிதைந்து கிடக்கின்றன.  1974ம் ஆண்டு ஐனவரி 10ம் திகதி நிகழ்ந்த அந்த துயரம் எனது கண்முன்னாலுந்தான் நிகழ்ந்தது. நான் தொண்டராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். சிவகுமாரன் எங்கள் தொண்டரணிக்கு பொறுப்பாக இருந்தான். நானும் சிவகுமாரனும் மேடைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தோம். எங்கள் அணிதான் உள்ளரங்க நிகழ்வை வெளியே நடாத்த வேண்டுமென்று மாநாட்டு ஒழுங்கமைப்பாளரை நிர்ப்பந்தித்திருந்தது. அந்த துயர சம்பவத்தினால் ஆவேசம் கொண்ட சிவகுமாரனும் நானும்  ஒழுங்குபடுத்தல் வேலைகளை முடித்த அன்றிரவே இதற்கு பழிவாங்குதென்று முடிவெடுத்தோம். இந்த முடிவுடன் நள்ளிரவுக்குப் பின் வீடு திரும்பியபோது அம்மா என் வருகைக்காக காத்திருந்தார். எங்கள் தெருவில் பலரும் வீதிகளில் கூடியிருந்தனர். எங்கள் தெருவுக்கு அண்மையில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் அந்த சம்பவத்தில் பலியாகி இருந்தார். என்னைக் கண்டதும் அம்மாவில் ஒளிர்ந்த மகிழ்வும், அயலவர்கள் காட்டிய பரிவும் விசாரிப்பும் இன்றைக்குப் போல் இருக்கின்றது. அந்த நிகழ்வில் அம்மா வாங்கித் தந்த கைக்கடிகாரம் தொலைநிதிருந்தது. ஆனால் மோதிரம் பத்திரமாக இருந்தது. அம்மாவுக்கு கடிகாரம் தொலைந்தது பற்றி கவலையிருக்கவில்லை. மோதிரம் இருந்தது திருப்தியாக இருந்தது.  அந்த நீலக்கல் பதித்த மோதிரம் 72ம் ஆண்டில் சிறையால் வெளிவந்ததும் எனது துர்க்குணங்கள் மாறவும் ராசியாக அமையவும்  அணிவித்திருந்தார். அவருடன் பணியாற்றிய சாத்திரத்தில் நம்பிக்கையுள்ள யாரோ அவருக்கு இந்த ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும். அந்த மோதிரம் அணிந்ததால் எனது துர்க்குணங்கள் விலகியதோ இல்லையோ எனது தேவைக்கு உதவியாக இருந்தது. கைத்துப்பாக்கி வாங்க காசு குறைந்தபோது எனது விரலில் இருந்து அம்மா தந்த மோதிரத்துடன் நண்பர் பத்மநாபாவின் கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் சேர்த்து விற்கவேண்டியதாயிற்று. பின்னர் ஒரு மங்கிய பொழுதில் நான் வீட்டிற்கு வந்திருந்தபோது அம்மா அந்த மோதிரம் எனது கையில் இல்லாதது கண்டு பதறிப்போனார். நான் அம்மாவுக்கு ஏதோ பொய் சொல்லி சமாளித்துக் கொண்டேன். இறைக்க இறைக்க கிணற்றின் ஊற்றுக் கண்கள் திறந்து கொள்கின்றன.
1972ம் ஆண்டு மேமாதம் 18ம் தேதி கைதுசெய்யப்பட்டபோது இந்தச் கோட்டைச் சிறைக்கு, அம்மா இரண்டு வயது கடைசித் தங்கையை தூக்கிக்கொண்டு  பார்க்க வந்த முதல் நாள் காட்சி நிழலாய் கவிகின்றது. அம்மா ஏமாற்றத்தால் அல்லது அவமானத்தால் நொந்து போயிருப்பது முகத்தில் தெளிவாகத் தெரிகின்றது. அப்போது நான் "அரசியல் கைதியாக இருக்கிறேன் பெருமைப்படாமல் ஏனிந்த அம்மா இப்படி உடைந்து போயிருக்கிறார்" என யோசித்ததுண்டு. ஆனால் ஆறு மாதங்களின் பின் வெளியே வந்து வீடு சென்ற போதுதான் பொலிஸ், சிறை பற்றியதான சமூக கண்ணோட்டத்தின் யதார்த்தம் என்னைச் சுட்டது. அம்மா எப்படியெல்லாம் நோகடிக்கப்பட்டிருப்பார் என்பதை உணர முடிந்தது. ஆனால் அம்மா என்மீது அன்பை பரிவை குறைத்ததே இல்லை. ஏழு பிள்ளைகளைப் பெற்ற அவர் மூத்தவனான எனக்கு மனோகரன் எனப் பெயரிட்டது அவருக்குள் இருந்த ஒரு  இலட்சியக் கனவினால் என்றுதான் நினைக்கின்றேன். எனது உறவினர்க்கு எனது பெயர் பிரான்சிஸ் என்பது தெரியாது மனோகரன் என்றுதான் இன்றைக்கும் அழைக்கின்றார்கள். 1953ம் ஆண்டுகளில் வெளிவந்த மனோகரா திரைப்படத்தின் தாக்கம் அம்மாவுக்கு இருந்திருக்கின்றது. ஆனால் அவரது கனவுக்குரிய அந்த இலட்சிய மகனாக நான் இருந்தேனா?  தாயையும் தாயகத்தையும் கைவிட்ட மகனாகி விட்டேனா? காலம் உரைக்கட்டும்.
1975ம் ஆண்டு நான் இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டபோது மிகக் கொடிய வன்முறைவாதியாக சித்தரிக்கப்பட்டிருந்தேன். கைது செய்யப்பட்ட மறுநாள் நான் யாழ்பாண பொலிசின் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்பட்டிருந்தேன். (இரண்டு வாரங்களின் பின்னர் கொழும்பு விசாரணைகளுக்காக வெலிகடைக்கு அனுப்பப்பட்டேன்.) மோசமான தாக்குதலுக்கு உள்ளாகி நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கதிரையில் உட்கார வைக்கப்பட்டு கேள்விக் கணைகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்ஸ்பெக்டர் பத்மநாதனும் அவனது உதவியாளர்களான சண்முகநாதன், கருணாநிதி, றொட்டிகோ, இன்னும் சிலரும் கோபமும் மூர்க்கமுமாக என்னைச் சூழ்ந்து நின்று கொண்டிருக்கின்றனர். தட்டச்சாளர் எனது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டிருக்கின்றார். அம்மா வெயிலில் களைத்தபடி ஓடியோடி தெருவழியாக பொலிஸ் நிலையத்தின் அலுவலகப் பகுதிக்கு சென்று கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது. ஆம் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மாவை இங்கு அழைத்து வருவார்கள் என்பதை நான் அறிவேன். இந்தக் கோலத்தில் அம்மா என்னைப் பார்த்தால் ஏங்கிப் போவார் என்பது எனக்குத் தெரியும். என்னை மறைவான இடத்திற்கு அனுப்பமாட்டார்களா எனத் தவித்தேன். அம்மாவின் பார்வையில் நான் தெரியவேண்டும் என்பதே பொலிசாரின் எண்ணம். வாசல் அத்தனை தூரம் இல்லை. அம்மா வாசலில் வந்து நிற்கிறார். நான் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கின்றேன். என்னோடு பேச அவர் அனுமதிக்கப்படவில்லை. அவரின் மனநிலை எவ்வாறாக இருந்திருக்கும்? அன்று மாலை அம்மா கொடுத்துவிட்டுக் போன  பார்சலை என்னிடம் தந்து பொலிஸ் காவல் அறையில் அடைத்தனர். அம்மா சாப்பாடு கட்டி வந்த பேப்பர் எனது கைது பற்றிய செய்தி வெளிவந்த அன்றைய தினசரி. அம்மாவை வாழ்த்திக் கொள்கிறேன். இப்படி எத்தனையோ தடவைகள் தானாகவே யோசித்து காரியங்கள் ஆற்றியுள்ளார். அம்மாவின் நினைவுகள் ஒன்றொன்றாய் கிளர்ந்து எழுகின்றன. எல்லாவற்றையும் கொட்டிவிட முடியுமா?
சுப்பிரமணிய பூங்கா நீதிமன்ற வளாகம் என்பவற்றை தாண்டி வாடகை வண்டி வீடு நோக்கி விரைகின்றது. இந்த நீதி மன்றத்தில் வைத்துதான் அடையாள அணிவகுப்பில் உதவிப் பொலிஸ் அதிபராக இருந்த சந்திரசேகரா என்னை அடையாளம் காட்டினான். இந்த வழக்கு உட்பட என் மீது தொடுக்கப்பட்ட ஏனைய வழக்குகளுக்கான பிடியாணைகள் 1977ன் இறுதியில் வீட்டிற்கு வந்தவண்ணம் இருந்தன. முதல் வழக்கிற்கு சமூகமளித்தேன்.  அடுத்த தவணை வரை பிணை வழங்கப்பட்டது. காணி உறுதி அல்லது ரொக்கப் பணம் பிணையாக வைக்க வேண்டும். எங்களிடம் காணி உறுதி எதுவுமிருக்கவில்லை. நீதிமன்றம் கேட்ட தொகையையும் உடனடியாக புரட்டமுடியவில்லை. மீண்டும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். புரட்டிய பணம் போதாத நிலையில் அம்மா தனது தாலிக்கொடி உட்பட்டதான வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் விற்று பிணை செலுத்த பத்து நாட்களாயிற்று. என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கையில் 'தம்பி இன்னும் இரண்டு வழக்குகளுக்கான பிடியாணைகள் இருக்கின்றன. நமக்கு அந்த சக்தி இல்லை. என்ன செய்யிறதென்று நண்பர்களுடன் யோசி. இல்லாட்டி முன்னைப்போல் தலைமறைவாக இருந்து கொண்டு உன்ர காரியங்களைப் பார்" என்கிறார். அதன்பின் நான் எந்த வழக்குக்கும் முகம் கொடுக்கவில்லை. அந்த வார்த்தைதான் என்னை வழிநடத்துகின்றது போலும். வெளிச்சத்தில் இருப்பதை இப்போதும் தவிர்த்து வருகின்றேன். அதனால் புதிது புதிதாய் பெயர்கள் புனைகின்றேன், தலைமறைவாய் இருட்டுக் குதிரையாய் இருப்பதே விருப்பமாய் இருக்கின்றது.
தாயின் தரிசனம் தரும் பரவசம் என்னை ஆட்கொள்கின்றது. அம்மாவின் தலைமாட்டில் நிற்கின்றேன். உறவினர்கள் சுற்றிவர அமர்ந்திருக்கின்றனர். மெழுகுவர்த்திகள் சுடர்ந்து கொண்டிருக்கின்றன. மன்றாட்டங்களால் அறை நிரம்பி வழிகின்றது. ஐயா தம்பியர் எல்லாம் என்னருகில் என்னைப் பிடித்தபடி நிற்கின்றனர். எனக்கு கண்ணீர் வரவில்லை. 'வாய்விடடு அழு தம்பி" என்கிறார் ஐயா. அம்மாவின் ஒளிரும் முகம் துப்பட்டியால் மூடப்பட்டிருக்கின்றது. துப்பட்டியை விலக்கி குனிந்து அம்மாவை கொஞ்சுகின்றேன். எதைநான் சொல்லியழ.. யாருக்கு சொல்லியழ.. நான் அழுவதைதான் அம்மா விரும்புவாரா?

24-05-2003 சனிக்கிழமை

இன்றைக்கு அம்மாவின் பிறந்தநாள். எழுபத்தைந்தாவது வயது தொடங்குகின்றது. மதியம் தாண்டியதும் அவர் இந்த வீட்டை விட்டுப் புறப்பட்டு விடுவார். அவரை வழியனுப்ப ஊரார் உறவினர்கள் எல்லாம் வந்து சேரத் தொடங்கி விட்டனர். அம்மாவின் இந்த நல்லடக்க நிகழ்வு அவருடைய பிறந்த நாளில் அமைந்தது திட்டமிடப்பட்டதொன்றல்ல. திருக்கோணமலையில் 18-05-2003 அன்று இறந்த உடனேயே ஐயா அம்மாவை மருத்துவமனையில் இருந்து யாழ்ப்பாணம் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டார். பிள்ளைகள் வந்து சேரும் வரையில் அம்மாவை பதனப்படுத்தி வைத்திருப்பது என்றே ஐயா திட்டமிட்டுச் செயலாற்றி இருந்தார். நோர்வேயில் வசிக்கும் தம்பி செவ்வாய்க் கிழமையும், யேர்மனியில் இருப்பவன் புதன்கிழமையும் சென்றிருந்தனர். நானும் மற்றத் தம்பியும் வியாழன் யாழ்ப்பாணம் செல்ல முயற்சித்தாலும் தம்பி வியாழன் செல்ல நான் வெள்ளிதான் செல்ல முடிந்தது. ஆதலால் நல்லடக்கம் சனிக்கிழமை என்று தீர்மானிக்கப்பட்டது. தனக்கு ஏதும் நிகழ்ந்தால் யாழ்பாணம் கொண்டு செல்லும்படி ஐயாவிடமும் தனது கடைசி மருமகளான தேவவதானாவிடமும் அம்மா கூறி வைத்திருந்தார். அம்மா இறந்தவுடன் அவருக்கு அணிவதற்கான உடைகளைத் தேடி எடுக்கச் சென்ற சுமதியின் அண்ணன் தனஞ்சயன் ஆச்சரியப்பட்டுப் போனார். அம்மாவின் பெட்டி பயணத்திற்கு ஏற்ற வகையில் அடுக்கப்பட்டிருந்தது. அம்மா தான் நோய்வாய்ப்படுவதற்கு முன்பே யாழப்பாணம் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு படுத்தியிருந்தார். மூன்று மாதங்களின் முன்னேயே எமது யாழ்பாண வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களுக்கு தாங்கள் மேமாதம் வரவிருப்பாதாகவும் வரும் போது வீட்டைத் தமக்கு தரும்வகையில் ஆயத்தமாக இருக்கும் படியும் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். திருக்கோணமலை வங்கிக் கணக்கை மூடி அதிலிருந்த பணத்தையும் எடுத்து சுமதியின் மற்றொரு அண்ணாவான கேசவனிடம் கொடுத்து வைத்திருக்கிறார். இப்படி பல முன்னேற்றாபாடுகள்.
நேரம் நெருங்கிவிட்டது. இறுதி அஞ்சலிகள் ஆரம்பமாகிவிட்டன. அம்மாவுக்கு ஐயா மாலை அணிவிக்கிறார். பிள்ளைகள் உறவினர்கள் தொடர்கின்றனர். அம்மா நேசித்த ஊரார் சுற்றத்தார் அம்மாவை சுற்றிவந்து அஞ்சலிக்கின்றனர். விம்மல் ஒலிகள் கேட்கின்றன. பிரியாவிடை உரையை நான் ஆரம்பிக்கின்றேன். எங்கள் அன்புக்கும் நேசத்திற்கும் உரியவர்களே! உங்கள் நேசத்திற்குரியராக எங்கள் அம்மா இருந்திருக்கிறார். அம்மா எங்களை எவ்வகையில் வளர்த்தார் என்பதை அயலவர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்;. அம்மா எங்கள் மீது நேசம் கொண்டிருந்ததுபோல நாங்களும் அம்மா மீது நேசம் கொண்டிருந்தோம். ஆனாலும் அம்மாவின் இறுதி வேளையில் அவரது ஏழு பிள்ளைகளில் ஒருவர் கூட அருகில் இல்லாமல் போனது வாழ்நாள் முழுவதும் எங்களை உறுத்திக் கொண்டே இருக்கும். மற்றவர்கள் மீதான நேசத்தையும் கருணையையும், சேவையையும் அம்மா தன் வாழ்வில் கடைப்பிடித்தார். இதைத்தான் எமக்கும் அவர் கற்றுத் தந்தார். அதேபோல் நாங்களும் உங்களது நேசத்துக்குரியவர்களாகத் தொடர்ந்தும் இருப்போம். பிள்ளைகள் அருகில் இல்லை என்ற குறையைத் தவிர மற்றெவர்க்கும் தொல்லை தராமல் அம்மா மகிழ்ச்சியுடனேயே இறந்தார். எல்லாம் நல்லபடியே நடந்தேறியுள்ளன. அம்மாவை வழியனுப்பி வைப்போம். அம்மா போய் வாருங்கள்... அம்மாவை எல்லோரும் ஒரு தடவை கொஞ்சுகிறோம். அம்மாவைத் தாங்கிய வண்டி நகரத் தொடங்கியது. அம்மா எங்களுடனேயே தரித்து நிற்கிறார்.
இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்து உறவினர், அயலவர், நண்பர்ளுடன் கூடி இருக்கையில் தான் இதுவோர் அரிய தருணம் என்பதை உணர முடிகின்றது. சமூகத்தின் குறுக்கு வெட்டான முகத்தை தரிசிக்க கிடைத்த வாய்ப்பல்லவா இது. தனது சாவிலும் அம்மா எனக்களித்த கொடையாகவே கருதிக் கொள்கிறேன். தாயக தரிசனத்தின் இரண்டாம் சுற்றுக்கு தயாராகத் தொடங்குகிறேன்.  

*இரண்டு பகுதிகளாக எழுதப்பட உள்ள கட்டுரையின் முதலாம் பகுதியிது. இது மணிமலரில் வெளிவந்தது.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08
TamilNet
HASH(0x55da811c32b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08


புதினம்
Thu, 28 Mar 2024 18:08
















     இதுவரை:  24713399 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6268 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com